"வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் அரசு பேருந்து பழுதாகி நிற்பது வாடிக்கையாகி விட்டது", பொதுமக்கள் குற்றச்சாட்டு

கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள மலைகிராமங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால், காட்டு மிருகங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கோவை : கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள மலைகிராமங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நிற்பதால், காட்டு மிருகங்களுக்கு மத்தியில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 



வால்பாறை : 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே 60 கிலோ மீட்டர் தொலைவில் வால்பாறை உள்ளது. உதகை, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைப்பகுதிகளுக்கு அடுத்தபடியாக வால்பாறை தான் சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. 

இங்கு தேயிலை தொழில் பிரதானமானது. கோவையிலிருந்து வால்பாறைக்கு 19 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வால்பாறை நகருக்குள் 25 பேருந்துகள் ஆக மொத்தம் 44 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு இயக்கப்படும் அனைத்துப் பேருந்துகளும் பழமையானது எனவும், இதனால் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் பேருந்துகள் நின்று விடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அதே சமயம், வால்பாறை பகுதியில் மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுவதில்லை எனவும், 10,000 மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இருந்தும் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, வால்பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் சின்னக் கல்லாறு, அப்பர், காடாம்பாறை, சேக்கன்முடி, அக்காமலை, வில்லோனி, தோணிமுடி உள்ளிட்ட எஸ்டேட் மற்றும் மலைக்கிராமங்களுக்கு கூடுதல் மற்றும் புதிய பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இது குறித்து வால்பாறை பகுதியின் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), பொதுச்செயலாளர் பரமசிவம் கூறுகையில், "வால்பாறை பகுதியில் பேருந்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகும். மேலும், பாதுகாப்பு குறைவான பேருந்துகளில் மக்கள் பயணிக்கின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் ஒழுகும் பேருந்துகள் தான் இங்கு அதிகம். 

ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் வால்பாறை நகர் மீது அக்கறை இல்லை. தமிழகம் முழுவதும் புதிய பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நிலையில், வால்பாறையில் இதுவரையில் புதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை," என்றார்.

சமீபத்தில் கூட வால்பாறை குருமலை, காட்டுபட்டி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 18 பேர் கோட்டூர் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு பேருந்து இல்லாததால் மினி லாரியில் வால்பாறை வழியாக திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, காடம்பாறை அருகே சாலையோரம் இருந்த சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனைகட்டி :

அதேபோல, கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியைச் சுற்றி ஏராளமான பழங்குடி கிராமங்கள் உள்ளன. என்.24 வீரபாண்டி புதூர் என்கிற முகவரியின் கீழ் இங்கு 23 மலைகிராமங்கள் உள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பில் பல ஆயிரம் மக்கள் பகுதியில் வசித்து வருகின்றனர்.

அரசுப் போக்குவரத்து கழகம், கோவை சார்பில் கோவை - ஆனைகட்டி பகுதிக்கு 8 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் - ஆனைகட்டி பகுதிக்கு துடியலூர் வழியாக 2 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

அதுபோக, இருமாநில (கோவை - கேரளா) எல்லை பகுதி என்பதால் கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் கோழிக்கோடு பகுதியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் வழியாக இரண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரைமணி நேரத்திற்கு ஒரு பேருந்து என்கிற விதத்தில் பகல் நேரத்தில் மட்டும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

இதனிடையே, பெரும்பாலும் தரம் இல்லாத அரசுப் பேருந்துகள்தான் இயக்கப்படுவதாக இப்பகுதி மக்களும் குற்றம்சாட்டுகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் பழங்குடியின மாணவர்கள், வேலைக்கு செல்லும் மக்கள், பொருட்கள் வாங்க துடியலூர் வரும் பழங்குடியினர் என அனைத்து தரப்பு மக்களும் தரமில்லாத பேருந்துகளால் அவதிப்படுகின்றனர்.



அப்பகுதியில் வசித்து வரும் சமூக ஆர்வலர் ஜி.பி.என். ஜோஸ்வா கூறுகையில், "வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியில் பேருந்து பழுதாகி நிற்பது வாடிக்கையாகி விட்டது. இதற்கு காரணம் தரமில்லாத அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவது தான். பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அரசுப் பேருந்தை நம்பி ஏராளமானோர் இருக்கின்றனர். அரசு தரமான பேருந்தை இப்பகுதியில் இயக்க வேண்டும்," என்றார்.

நீலகிரி : 

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் கோத்தகிரி வழியாக சுமார் 320 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 42 இருக்கைகளைக் கொண்ட மினி பேருந்துகளும், 52 இருக்கைகளைக் கொண்ட பெரிய பேருந்துகளும் இரு ரகங்களாக இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளை தவிர்த்து அங்கு வாழும் அனைத்து தரப்பு மக்களும் 90 சதவீதம் அரசு பேருந்துகளை நம்பியே உள்ளனர். 

இங்கு சமவெளி பகுதியில் இயக்கிய பழைய பேருந்துகள் தான் அதிகம் இயக்கப்படுவதாகவும். அதனால் பராமரிப்பு இல்லாமல் 6 முதல் 7 வருட பழைய பேருந்துகளால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சு. மனோகரன் கூறுகையில், "போக்குவரத்து விதிமுறைகளை மீறிதான் இங்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எக்ஸ்பிரஸ் கட்டணம் என்கிற பெயரில் சாதாரண பேருந்துகளும் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். பள்ளி நேரங்களில் சுமார் 100 பேர் ஒரே பேருந்தில் பயணிக்கும் நிலைதான் உள்ளது. 

பழைய பேருந்துகள் என்பதால் மிகவும் மெதுவாக செல்வதால் காலவிரயம் ஏற்படுகின்றன. அதிகாரிகள் தரப்பில் மலைப்பகுதியில் பேருந்துகள் இயக்கப்படுவதால் எங்களுக்கு நஷ்டம் தான் என கூறுகின்றனர். அதனால் தான் பழைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மக்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். சமவெளியில் இயக்கிய பழைய பேருந்துகளுக்குப் பதிலாக புதிய பேருந்துகளை இயக்க வேண்டும்," என்றார்.

புதிய பேருந்துகள் அறிவிக்கப்பட்டு, சில பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அது தொலைதூர பயணங்களான உதகை - ஈரோடு, உதகை - திருப்பூர், உதகை - கோவை, உதகை - நகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு தான் இயக்கப்படுவதாகவும், இதனால் உள்ளூர் போக்குவரத்தை உபயோகிக்கும் மக்களுக்கு பயனில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து கோவை மண்டல போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழக அரசு மலைவாழ் மக்கள் நலன் கருதி புதிய பேருந்துகளை அறிவித்துள்ளது. அதேசமயம், அனைத்து மலைப்பாங்கான இடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் சரியான முறையில் பராமரிப்பு செய்யப்படுகின்றன," என்றார்.

மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் தரமான பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...